மூடவும்

சுகாதாரம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை

வேலூர் மாவட்டத்தில் 20 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 75 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 22 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 117 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 425 துணை சுகாதார நிலையங்கள் கிராம சுகாதார செவிலியர்களைக்கொண்டு செயல்படுகின்றன.

6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. 20 ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 12 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்த சேமிப்பு வங்கிகள் செயல்படுகிறது. 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை பிரிவுகளும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே பிரிவும் செயல்பட்டு வருகின்றன. 20 நடமாடும் மருத்துவ குழுக்களும், 40 RBSK பள்ளி மருத்துவ குழுக்களும் செயல்பட்டு வருகிறது. 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இம்மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள்

புறநோயாளிகள், உள்நோயாளிகள், பிரசவங்கள் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சைகள்

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 304 புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாதத்திற்கு சராசரியாக 7294 உள்நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர். மாதத்திற்கு சராசரியாக 939 பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பார்க்கப்படுகிறது. அதில் 50 பிரசவங்கள் அறுவை சிகிச்சைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மாதத்திற்கு 340 குடும்பநல அறுவை சிகிச்சைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன.

தாய்சேய் நலத்திட்டங்கள்

தாய்சேய் நலத்திட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள் அவர்களின் துணை சுகாதார நிலையத்தில் உள்ள கிராமம் தோறும் சென்று கர்ப்பிணிகளை ஆரம்ப நிலையிலேயே பதிவு செய்து, அவர்களுக்கு ஆய்வக பரிசோதனைகள் தடுப்பூசிகள், இரும்புச்சத்து / கால்சியம் மாத்திரைகள், குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து சென்று பிரசவ முன் கவனிப்பு வழங்க ஏற்பாடு செய்கின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே அவர்களுக்கு பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கலான பிரசவங்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வருடம் இதுவரை கர்ப்பிணி தாய்மார்கள் 45,510 பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 42001 கர்ப்பிணிகள் பதியப்பட்டு 92.3% ,இலக்கு அடையப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள்

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் பிறந்த 1-வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிசிஜி, ஓபிவி மற்றும் பெண்டா 1, 2, 3 தவணைகள், ஐபிவி 1,2 தவணைகள் ரோட்டா 1, 2, 3 தவணைகள் மற்றும் தட்டம்மைரூபெல்லா ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதுவரையிலான 40914 இலக்கீட்டில் பிசிஜி தடுப்பூசியில் 38959, (95%) இலக்கினையும், ஒபிவி / பெண்டா 3ம் தவணை தடுப்பூசி 39873, (97%) இலக்கினையும், தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியில் 39904, (97%) இலக்கு அடையப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம்

தமிழக அரசு தாய், சேய்நல திட்டத்தில் மகப்பேறு மரணம் மற்றும் சிசு மரணங்களை குறைக்கும் நோக்கத்துடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணிகள் ஆரம்ப நிலையிலேயே பதிவு செய்யப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால கவனிப்பு, தடுப்பூசி மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபின், 5ம் மாதம் முதல் தவணையாக ரூ.4000 வழங்கப்படுகிறது, 2ம் தவணை ரூ.4,000 பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றபிறகு வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 3 ½ மாதம் வழங்கக்கூடிய பெண்டாவேலன்ட் தடுப்பூசி பெற்றபிறகு 3-ம் தவணை ரூ.4000 வழங்கப்படுகிறது.
2017-2018ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் ரூ.58.08 கோடி வரப்பெற்று, ரூ.22.21 கோடி செலவிடப்பட்டு, 28707 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.

ஜனனி சுரக்க்ஷர யோஜனா திட்டம்

ஜனனி சுரக்க்ஷர யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களுக்கு ரூ.600 மற்றும் ரூ.700ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இத்திட்டத்தில் 20867 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.

வளரிளம் பெண்களுக்கான விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர இலக்காக 171105 வளர் இளம் பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தில் 91% வரையிலான இலக்கு அடையப்பட்டுள்ளது.

அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்

அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் திட்டத்தின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த 6,672 தாய்மார்களுக்கும். அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த 6,320 தாய்மார்களுக்கும், மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரசவித்த 7,050 தாய்மார்களுக்கும் மொத்தமாக 20,042 தாய்மார்களுக்கு 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைநல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

 நடமாடும் மருத்துவக்குழு

இம்மாவட்டத்தில் 20 நடமாடும் மருத்துவ குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவ குழுக்கள் மாதாந்திர முன்பயண திட்டத்தின்படி வெகுதொலைவில் உள்ள கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களுக்கு மருத்துவ அலுவலரின் தலைமையில் சென்று மருத்துவ சேவை அளிக்கின்றனர். இதற்கென பிரெத்யேகமான வடிவமைக்கப்பட்ட வாகனத்தில், காலை ஒரு கிராமத்திற்கும் மாலையில் ஒரு கிராமத்திற்கும் சென்று புறநோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேல்சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு பரிந்துரையும் செய்கின்றனர். இந்த வருடம் 7380 முகாம்கள் திட்டமிடப்பட்டு, 7195 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 651083 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், இத்திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக 2 நடமாடும் மருத்துவமனைகள் வேலூர் சுகாதார மாவட்டத்தில் பீஞ்சமந்தை ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளிலும் மற்றும் திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் புதூர்நாடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளிலும் தொண்டு நிறுவனங்களின் புரிந்துணர்வோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலவச பிறப்பு சான்று

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களுக்கு மருத்துவமைனையிலிருந்து செல்லும்முன் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் இதுவரை 20,042 பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

அம்மா ஆரோக்கிய திட்டம்

20 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரந்தோறும் அம்மா ஆரோக்கிய திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 25 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்த வருடம் 35036 ஆண்களும் 55967, பெண்களும் என மொத்தமாக 91003 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மாண்புமிகு தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்கள்

ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆண்டிற்கு 3 முகாம்கள் வீதம் 60 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 58 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாமில் ஆண்கள் 15656, பெண்கள் 31448 குழந்தைகள் 10249 பங்குபெற்று மொத்தம் 57353 பயனடைந்துள்ளனர். 270 நோயாளிகள் மேற்சிகிச்சைக்காக பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம்

தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் (RBSK) டிசம்பர் 2014ல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வளரிளம் பருவத்தினர் வரை ஏற்படக்கூடிய பிறவிக்குறைபாடுகள், வளர்ச்சிக்குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நோய்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றிற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆரம்ப நிலையிலேயே வளர்ச்சி குறைபாடுகள் மற்றும் இதர குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படுவதால், அக்குறைபாடுகளை துரித நிலையில் குணப்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு நடமாடும் மருத்துவ குழுக்கள் வீதம் வேலூர் மாவட்டம் முழுவதும் 40 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை பரிசோதித்து, சிறிய பிரச்சினைகளுக்கு அங்கேயே சிகிச்சை மேற்கொள்கின்றனர். இதர நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. 6-ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவியர்களை பெண் மருத்துவ அலுவலர் குழுவும், மாணவர்களை ஆண் மருத்துவ குழுவும் 25 கருவிகள் உள்ளடக்கிய குழந்தைகள்நல பரிசோதனை பெட்டகத்தைக்கொண்டு பிரத்யேகமாக பரிசோதனை செய்கிறார்கள். இதுவரை இத்திட்டத்தில் 3,607 அங்கன்வாடி மையங்கள் பார்வையிடப்பட்டு, 231194 குழந்தைகளை பரிசோதித்துள்ளார்கள். மேலும், 2460 பள்ளிகளுக்கு சென்று 389710 மாணவ மாணவியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 29045 குழந்தைகள், மாணவ / மாணவியர்கள் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அந்தந்த வட்டார மருத்துவ குழுக்கள் வாகனங்கள் மூலமாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட ஆரம்பநிலை துரித சிகிச்சை மையத்திற்கு (DEIC) அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி மையத்தில் குழந்தைகளை பரிசோதிக்க பிரத்யேகமாக ஒரு குழந்தைநல மருத்துவர் செயல்பட்டு வருகிறார்.

புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாடு தேசியதிட்டம்

2012 ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தொற்றா நோய்கள் பரிசோதனை கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய அளவில் 2016 ஆண்டு முதல் புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் கட்டுப்பாடு என மேற்படி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி கடந்த ஏப்ரல் – 2017 முதல் டிசம்பர் – 2017 வரை வேலூர் மாவட்டத்தில் இரத்த அழுத்தம் பரிசோதித்ததில் 284064 நபர்களில் 24520 நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் 233142 நபர்களுக்கு பதிசோதித்து அதில் 14220 நபர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை உறுதிசெய்யப்பட்டது. பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் 83090 நபர்களுக்கு பதிசோதித்து அதில் 1080 நபர்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் 106721 நபர்களுக்கு பதிசோதித்து அதில் 1243 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மூலம் கண்டறிந்து மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வளர்இளம் பருவத்தினர் நலதிட்ட மையம்

இத்திட்டதின்கீழ் வளர் இளம்பருவத்தினருக்கான (10 முதல் 19 வரை வயதினருக்கான) உடல்சார்ந்த மற்றும் மனம்சார்ந்த மனோரீதியான ஆலோசனைகள். வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகள். அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் ஆலோசகர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. மேற்படி திட்டத்தில் 10187 வளர் இளம்பருவத்தினர் இந்த மையத்தில் ஆலோசனை பெற்றனர்.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்கள்

கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு. சிக்கன்குனியா, மலேரியா மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

காய்ச்சல் கண்காணிப்பு
 • தினமும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து தேசிய நோய் ஒருங்கிணைப்பு திட்டத்தின் வாயிலாக காய்ச்சல் கண்ட நபர்களின் அறிக்கைகள் பெறப்பட்டு அவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் என பிரித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.
 • இதனை வட்டார அளவில் இயங்கும் விரைவாக செயல்படும் குழுக்களுக்கு அனுப்பி உடன் அப்பகுதியில் மருத்துவமுகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரப்படும் காய்ச்சல் கண்டவர்கள் அறிக்கை அந்தந்த மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு தேசிய நோய் ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் அனுப்பப்படுகிறது.
 • மேலும், காய்ச்சல் கண்டவர்களுக்கு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் இயங்கும் நடமாடும் மருத்துவக்குழு மற்றும் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் மூலம் மருத்துவமுகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
திறனாய்வு கூட்டங்கள்
 • உள்ளாட்சி அமைப்புகள், பொதுசுகாதாரம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், மருத்துவகல்லூரி, பள்ளிகல்வித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளை இணைத்து மாவட்ட அளவில் நோய்தடுப்புக்கான வாராந்திர ஒருங்கிணைப்புக்கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்பட்டது. மேலும், கொள்ளைநோய் தடுப்பு தொடர்பான மாதாந்திர திறனாய்வு கூட்டம் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளையும்கொண்டு கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு தொடர்பாக நடத்தப்பட்டு தடுப்பு நடடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
 • கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள்
  பொது சுகாதாரம், மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகள் இவற்றின் மூலம் நியமிக்கப்பட்டு காய்ச்சல் கண்ட பகுதிகள், டெங்கு பாதித்த பகுதிகள், கொசுக்கள் அடர்த்தி அதிகமாக காணப்பட்ட பகுதிகள், கொள்ளைநோய் ஏற்பட்ட பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகள்இ திரையரங்குகள், திருமண மண்டபங்கள். ஹோட்டல் கள், கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், குடியிருப்பு பகுதிகள், பள்ளி கல்லுரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அங்கன்வாடி ஆகிய இடங்களில் 1926 டிபிசி பணியாளர் மூலம் தினமும் கொசுப்புழு தடுப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
 • ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு சுகாதார ஆய்வாளர்களைகொண்ட குழு நியமிக்கப்பட்டு அக்குழுக்கள் டிபிசி பணியாளர்களுடன் வீடு வீடாகச்சென்று கொசுப்புழு மருந்து தெளித்தல், திறந்துவைத்த கலன்களை மூடிவைப்பது, பிளீச்சிங் பவுடர் விநியோகித்தல், தேவையில்லாத பொருட்களை கோணிப்பைகொண்டு அப்புறப்படுத்துதல், புகைமருந்து தெளிப்புப்பணி மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 • தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வலர்கள், பயிற்சி மருத்துவர்கள் , பயிற்சி செவிலியர்கள், பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்களை ஈடுபடுத்தி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதுடன் விழிப்பணர்வு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ முகாம்கள்
 • விரைவாக செயல்படும் குழுக்கள், நடமாடும் மருத்துவக்குழுக்கள் மற்றும் தேசிய குழந்தை நலத்திட்ட குழுக்களைக்கொண்டு காய்ச்சல்கள் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைகள்
 • அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு தொடர்பான சிகிச்சைக்குரிய நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 • அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காய்ச்சல்களுக்கென தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சையளிப்பதுடன் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல், ஓஆர்எஸ் கரைசல் விநியோகித்தல், பப்பாளி இலைச்சாறு முதலியன தயாரப்பது பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கொசுப்புழு உற்பத்தி கண்காணித்தல்
 • மாவட்ட பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள் ஆகியோர்களைக்கொண்டு கொசுப்ழு உற்பத்தியின் அடர்த்தி கணக்கிடப்பட்டு அவை அதிகமாக உள்ள பகுதிகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விரைவாக செயல்படும் குழுக்களுக்கு அறிவித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
ஒட்டுமொத்த துப்புரவுபணி
 • மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் ஒட்டுமொத்த துப்புரவுபணி மேற்கொள்ளப்பட்டு தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு உற்பத்தி தடுக்கப்படுகிறது.
 • பொதுசுகாதார சட்டத்தின் மூலம் அபராதம் விதித்தல்
  பொதுசுகாதார சட்டத்தின் மூலம் கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமான தனியார்கள் தொழிற்சாலை நிர்வாகிகள், கடைகள் முதலியானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ. 1794650 மாவட்டம் முழுவதுமாக வசூலிக்கப்பட்டது.
நலக்கல்வி
 • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சியைச்சார்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு தொடர்பான விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 • பள்ளிகளில் டெங்குநோய் தொடர்பான உறுதிமொழி கடவுள் வாழ்த்தின்போது எடுக்கப்பட்டது.
 • வியாழக்கிழமைதோறும் அனைத்து அரசு அலுவலகங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், தனியார் நிறுவன கட்டிடங்கள் மற்றும் பள்ளி கல்லூர்கள் ஆகியோர்கள் கொசுப்புழு தடுப்புபணி மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெறப்பட்டு வரப்படுகிறது.
 • நடமாடும் மருத்துவக்குழு மூலம் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டு விழிப்பபுணர்வு ஏற்படுத்ப்பட்டு வருகிறது.
 • பொதுமக்களுக்கு வீடுவீடாக செல்லும்பொழுபு டிபிசி பணியார்கள் மூலம் கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுப்பது, உற்பத்தியானால் எப்படி தடுப்பது மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வது தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது என்பன பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவரப்படுகிறது. ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2017 வரை 358 டெங்கு நோயால் இறப்பு ஏதுமில்லை.

ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்

ஆலங்காயம் வட்டாரத்தில் புதூர்நாடு, ஜோலார்பேட்டை வட்டாரத்தில் ஜோலார்பேட்டை மற்றும் நாட்றாம்பள்ளி வட்டாரத்தில் பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 30 படுக்கைகள்கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டன,. மேலும், ஆலங்காயம் வட்டாரத்தில் நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டுநாடு, நாட்றாம்பள்ளி வட்டாரத்தில் ஆத்தூர்குப்பம், மாதனூர் வட்டாரத்தில் சின்னப்பள்ளிகுப்பம் மற்றும் அணைக்கட்டு வட்டாரத்தில் பீஞ்சமந்தை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதியதாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.615.00 இலட்சம் ஆகும்.

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
வேலூர்
[/vc_column_text][/vc_column][/vc_row]