மாவட்டம் பற்றி
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்பூர் சுல்தான் போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பெற்ற பெருமைமிக்க பாரம்பரியம் கொண்டது. 17-ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி., 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய் படுகொலையைச் சாட்சியாகக் கொண்டுள்ளது.
வேலூர் மாவட்டமானது, தமிழ்நாட்டில் 12′ 15’ முதல் 13′ 15’ வரை வடக்கு அட்சரேகையிலும் மற்றும் 78′ 20’ முதல் 79′ 50’ கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிலப்பரப்பு 5920.18 சதுர கி.மீ. ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 39,36,331 ஆகும்.
வேலூர் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கியப் பெருநகரங்களை இரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. பெருமைமிக்க கடந்த காலத்தை ஆராயும்போது வேலூர் மாவட்டத்தின் சிறப்பும், முக்கியத்துவமும், தொடர்பும் நன்கு விளங்கும். இம்மாவட்டத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் கடந்த காலத்தின் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கின்றன. 18-ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கி.பி. 1749-ல் நடைபெற்ற ஆம்பூர் போர், கி.பி.1751-ல் நடைபெற்ற ஆற்காடு போர், கி.பி. 1768-ல் நடைபெற்ற வந்தவாசி போர் போன்றவை ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு போன்ற மேலாதிக்கத்திற்காக நடந்த நீண்ட வெற்றிகரமான போர்களில் வேலூர் மாவட்டம் ஒரு மிகச்சிறந்த சாட்சியாக விளங்குகிறது.
வேலூர் கோட்டையானது வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஒன்று. இக்கோட்டையிலுள்ள கல்வெட்டுக்களை நுணுக்கமான முறையில் ஆராயும்போது, இக்கோட்டையானது கி.பி.1526 முதல் கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என அறிய வருகிறது. வேலூர் கோட்டையானது தென்னிந்தியாவின் இராணுவக் கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடம் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலின் உள்ளே இடது பக்கத்தில் உள்ள நுணுக்கமான கலைச்சிற்பங்களுடன் கூடிய கல்யாண மண்டபமானது காலத்தை கடந்து நிற்கும் பொறியியல் மற்றும் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குகின்றது. மேலும், வேலூர் நகரின் மற்றொரு அடையாளமாகவும், மருத்துவ உலகின் மையமாகவும் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.
இராணுவப் பணிக்கு தங்களை அதிக அளவில் ஏடுபடுத்திக்கொண்டு வீரதீரத்துடன் ஆத்மார்ந்த சேவை செய்பவர்களை அதிகமாகக் கொண்டு, தேசத்தில் மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் உள்ளது. வேலூரின் பாராட்டத் தகுந்த மற்றுமொரு மிகச்சிறந்த அம்சமாகும். வேலூரிலுள்ள் லாங்கு பஜாரில் வீற்றிருக்கும் மணிக்கூண்டானது கி.பி., 1928-ல் நிறுவப்பட்டது. இந்த மணிக்கூண்டு உள்ள கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் “இந்த ஊரிலிருந்து 1914-18-ல் நடந்த முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவர்களில் 14 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்ற வரிகள் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டானது வேலூர் மக்களின் வீரத்திற்கு பதியப்பட்ட சான்றாக உள்ளது.