விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை
முன்னுரை
தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க செய்திடும் பொருட்டு விதை ஆய்வு பிரிவு மாவட்ட அளவில் விதை ஆய்வு துணை இயக்குநர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதைச் சட்டம் அமலாக்க பணியினை விதை ஆய்வு துணை இயக்குநர் செயல்படுத்தி வருகிறார்.
நோக்கம்
- விதை விற்பனையாளர்களுக்கு விதை உரிமம் வழங்குதல்
- விதையின் தரத்தினை உறுதி செய்திட விதை விற்பனை நிலையங்களில் காலமுறை ஆய்வு செய்தல்.
- விதையின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு விதை விற்பனை நிலையங்களில் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுத்தல்.
- விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
- பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்விற்கு அனுப்பிட விதை விற்பனையாளர்களை ஊக்குவித்தல்.
- தரமற்ற விதை குவியல்கள் மீது விதை சட்டத்தின்படி செயலாக்க நடவடிக்கை எடுத்தல்.
அதிகார எல்லை
வேலூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் & திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள்.
விதை ஆய்வாளர்களின் தலைமையிடம்
வேலூர் மாவட்டம் :
வேலூர், குடியாத்தம்
திருவண்ணாமலை மாவட்டம்:
திருவண்ணாமலை, ஆரணி
விதைச்சான்றளிப்புத் துறை விவசாயிகளுக்கு பின்வரும் சேவைகளை வழங்கிவருகிறது
- விதைச்சான்றளிப்பு
- விதை ஆய்வு
- விதைப் பரிசோதனை
- பயிற்சியளித்தல்
- அங்ககச்சான்றளிப்பு
விதைச்சான்றளிப்பு
தரமான விதையானது அரசாங்கம் மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களால் விதைச்சான்றளிப்புத் துறை அலுவலர்களின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
விதைப்பண்ணையானது விவசாயிகளின் நிலங்கள் அல்லது அரசாங்க பண்ணைகளில் கருவிதை அல்லது ஆதார விதைகளை பயன்படுத்தி அம்மாவட்டத்தில் உள்ள விதைச்சான்று உதவி இயக்குநரிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணையானது பல்வேறு நிலைகளில் விதைச்சான்று அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு விதைப்பண்ணையின் தரம் உறுதி செய்யப்படுகிறது. தரம் உறுதி செய்யப்பட்ட விதைப்பண்ணையானது அறுவடைக்கு அனுமதிக்கப்பட்டு அவ்விதையானது சுத்திசெய்யப்படுகிறது. சுத்தி செய்யப்பட்ட விதைக்குவியலானது முளைப்புத் திறன், புறத்தூய்மை, பிறரக கலவன் மற்றும் ஈரப்பதம் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகிறது. விதைப் பகுப்பாய்வின் முடிவில் தேறும் பட்சத்தில், அவ்விதையானது சம்மந்தப்பட்ட விதைச்சான்று அலுவலர்களால் சான்று செய்யப்பட, விதைச்சான்று அட்டையானது விதைச்சான்றளிப்புத் துறையின் மூலம் வழங்கப்படுகிறது.
சான்று பெற்ற விதைகளின் பயன்பாடுகள்
- அதிகப்படியான முளைப்புத்திறன் உடையது.
- அளவான ஈரப்பதம்
- புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை உடையது.
- பிறரக கலவன்கள் அற்றது.
- பூச்சி / நோய் தாக்குதல் இல்லாமை.
விதை ஆய்வு
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதை ஆய்வு பிரிவு விதைச்சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு 1983 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 அமலாக்கம் செய்து வருகிறது. விதைக்கட்டுப்பாட்டு ஆணையின் படி விதை கொள்முதல் செய்தல் , இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. விதை விற்பனை நிலையங்களிலிருந்து விதை மாதிரி எடுத்து பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி தரத்தினை உறுதி செய்ய விதை ஆய்வாளர்களுக்கு அதிகாரம் உள்ளது. தரமற்ற விதைக் குவியல்கள் கண்டறிதல், விற்பனை தடை உத்தரவு பிறப்பிப்பதோடு, உரிய நபரின் மீது விதைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தரமான நல்ல விதைகளை அளிப்பதன் மூலம் விவசாயிகளுடக்கு காலம்,உழைப்பு மற்றும் பணம் விரயமாவதை தடுத்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.
விதைப்பரிசோதனை
விதைத்தரங்களான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிறரக கலவன்கள் மற்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த விதைப்பரிசோதனையானது குறித்தறிவிக்கப்பட்ட விதைப்பரிசோதனை ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
விதை மாதிரிகள் வகைகள் சான்று விதைமாதிரி, ஆய்வாளர் விதை மாதிரி மற்றும் பணி விதை மாதிரிகள் ஆகும். விதை பகுப்பாய்வு முடிவுகள் அதிகபட்சம் கால வரம்பு 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இக்கால வரம்பானது சில பயிர்களுக்கு மாறுபடும்.
பயிற்சிகள்
விதைச்சான்று முறைகள், விதைச்சட்ட அமுலாக்கம், விதைப்பரிசோதனை மற்றும் அங்ககச்சான்றளிப்பு பற்றிய பயிற்சியானது விதைச்சான்று துறை அலுவலர்களால் விதை உற்பத்தியாளர்களுக்கு அவ்வவ்போது வழங்கப்படுகிறது. விதை உற்பத்தி நுட்பங்கள், விதை தரங்கள், விதை நெறிமுறைகளை அறிவூட்டுவதன் மூலம் பயிற்சியளிப்பு பயனுள்ளதாக இருக்கும். இதனால் அனைத்து நிலைகளிலும் விதைத்தரம் நிலைநிறுத்தப்படும்.
அங்ககச்சான்றளிப்பு
தமிழ்நாடு அரசாங்கமானது அங்ககச்சான்றளிப்பு முறைகளை சேர்க்கும் பொருட்டு கூடுதலாக விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறை என மே 2007 -ஆம் ஆண்டு மாற்றம்செய்யப்பட்டு, அங்ககச்சான்று பற்றிய ஆய்வு மற்றும் பதிவு முறைகள். இயற்கை வழி உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் (National Programme on Organic Production- NPOP) வரையறையின்படி அங்ககச்சான்று பற்றிய ஆய்வு மற்றும் பதிவு முறைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அங்ககச்சான்றளிப்பில் உள்ள படிகள்
- பதிவு நடைமுறை
- விண்ணப்பங்கள் ஆய்வு
- ஆய்வு திட்டமிடல்
- ஆய்வு போது சரிபார்ப்பு
- குழு சான்றளிப்பு தரநிலைகள்
- சான்றிதழ் வழங்குதல்.