மூடவும்

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்

வ. எண் வரலாற்றுச் சின்னத்தின் பெயர் அமைவிடம்
1 ஜலகண்டேஸ்வரர் கோயில் வேலூர்
2 கோட்டை வேலூர்
3 மசூதி வேலூர்
4 சோமநாதர் கோயில் மேல்பாடி
5 சோழீஸ்வரர் கோயில் மேல்பாடி
7 சுப்ரமண்யஸ்வாமி கோயில் வள்ளிமலை
8 ரங்கநாதர் ஆலயம் எருக்கம்பட்டு

வேலூர் கோட்டை

வேலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொல்லியல் சின்னம் வேலூா் கோட்டையாகும். இக்கோட்டையும் அதனுள் அமைந்துள்ள கட்டிடப்பகுதிகளும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இக்கோட்டை கி.பி.1526 முதல் 1595-ல் வேலூா் பகுதியை ஆட்சிச் செய்த சின்னபொம்மு நாயக்கராலும், அவர்களின் சகோதரர்களாலும் கட்டப்பட்டதாகும். இக்கோட்டை வேலூாின் மையப்பகுதியில் 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் கோட்டைகள் எப்படி கட்டப்பட்டிருக்கும் என்பதை அறிய முழுமையாக நமக்கு கிடைக்கக்கூடிய ஒரே கோட்டை வேலூா் கோட்டையாகும். இக்கோட்டையின் உட்பகுதியிலேயே இந்து மதத்தினர் வணங்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலும், கிறித்துவர்கள் வணங்கும் 1846-ல் கட்டப்பட் தேவாலயம் ஒன்றும், இசுலாமிய பெருமக்கள் தொழுகை நடத்தும் மசூதி ஒன்றும் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.

மேலும் இக்கோட்டையில் ஐதா்மகால், திப்பு மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷாமகால் என்று ஐந்து மன்னர் பரம்பரையினரை குறிப்பிடும் மகால்கள் அமைந்துள்ளன. வேலூர் கோட்டையும் அதனைச் சுற்றியுள்ள பெரிய அகழியும் மிகவும் முக்கியம் வாய்ந்தவைகளாகும்.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்

மேல்பாடி கோயில்

Choleeshwaram, Melpadi - Arinjaya Cholar Pallipadai Temple

அரிஞ்சய சோழீஸ்வரம், மேல்பாடி – அரிஞ்சய சோழர் பள்ளிப்படை கோயில்

வேலூா் மாவட்டத்தில் வாலாசா வட்டத்தில் மேல்பாடி என்னும் ஊர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் ஊராகும். பேரரசன் ராசராசன் இங்கு சோமநாதருக்கு கோயில் எடுப்பித்ததும் அதன் அருகிலேயே தமது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு அவரை அடக்கம் செய்த இடத்தில் அரிஞ்சய சோழீஸ்வரம் என்ற பெயரில் பள்ளிப்படை கோயில் ஒன்று எடுப்பித்ததுமே காரணம் ஆகும். இவ்விரு சிறப்பு மிக்க கோயில்களும் நுகா என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. போற்றுதலுக்குரியதாகும். இவ்வூரில் உள்ள கோயில்களில் முதலாம் ராசராசன், முதலாம் ராசேந்திரன், கோப்பெருஞ்சிங்கன், சம்புவராயர்கள், விசய நகர மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுவதும், அவற்றின் மூலம் அக்கால வரலாற்றை அறியமுடிவதும் சிறப்பான ஒன்றாகும்.
மேல்பாடியில் உள்ள சோமநாதர் கோயிலில் உள்ள ஏழு கன்னியர் சிற்பங்களும் பிற சிற்பங்களும் ராசராசன் காலத்து சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்

வள்ளிமலை நினைவுச்சின்னங்கள்

வேலூர் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்களில் வள்ளிமலை சமணச் சிற்பங்களும் ஒன்றாகும். இந்நினைவுச் சின்னம் தற்போது காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கி.பி 9 மற்றும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்கள் உள்ளன. இராட்டிரகூட மன்னரான மூன்றாம் கிருஷ்ணாவின் கல்வெட்டும் இங்கு உள்ளது. இவ்வூரின் அருகில் அமைந்துள்ள மேல்பாடியும், கோட்டைமேடு என்ற பகுதியும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாகும். கோட்டைமேட்டுப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராசராசன் காலத்து வெள்ளிக்காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சமணச் சிற்பங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும், கி.பி.9-ம் நூற்றாண்டின் கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்